ஆஸ்திரேலியாவில், காட்டுத்தீயில் சிக்கி 300 கோடி உயிரினங்கள் பாதிப்படைந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியாகி உள்ளது.
ஒரு பிரதமருக்கு தங்கள் நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதென்பது வெகு சாதாரணமானது. ஆனால், நேருக்கு நேராக “உங்களுடன் கைக்குலுக்க விரும்பவில்லை என்றும், அடுத்து வரும் தேர்தலில், இந்த பகுதியில் இருந்து நீங்கள் ஒரு வாக்கை கூட பெற முடியாது” என்று சூளுரைப்பதெல்லாம் அசாதாரணமான நிகழ்வு. அப்படி ஒரு நிகழ்வுதான் கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் அரங்கேறியது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல், விக்டோரியா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும், கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கிய காட்டுத்தீ, டிசம்பர் மாதத்தில் அதன் உக்கிரத்தை முழுமையாக வெளிக்காட்டியது. தீவிபத்தின் கோரத்தில் சிக்கி, ஆஸ்திரேலியாவின் தெற்கு, கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள வனங்கள், பற்றி எரிந்த போது, உலகமே கவலையில் ஆழ்ந்தது.
பற்றி படர்ந்த காட்டுத்தீயின் கோரத்தில் தன் அழகியலை இழந்த அமேசான் போன்று, ஆஸ்திரேலியாவும் தன் வனங்களை இழந்துவிடக் கூடாது என, சூழலியல் ஆர்வலர்கள் போராட்டங்களையும் முன்னெடுத்தனர். கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கி இந்தாண்டின் மார்ச் வரையிலான காலத்தில், காட்டுத்தீயில் சிக்கி 34 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். புகைமூட்டம், காற்றுமாசு உள்ளிட்ட காரணங்களால் மேலும் 400க்கும் மேற்பட்டோர் இன்னுயிரை இழக்க, பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள் என பல கோடி உயிரினங்கள், ஆஸ்திரேலியா தீவிபத்தில் அழிந்திருக்க கூடும் என ஆய்வாளர்கள் கணித்தனர்.
இந்த நிலையில் தான், 2019 – 2020ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய வனப்பகுதிகளில் நேரிட்ட தீ விபத்தில் சுமார் 300 கோடி உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, சூழலியல் பாதுகாப்புக்கான உலகளாவிய நிதியம் தெரிவித்துள்ளது. ஏராளமான விலங்குகள் உயிரிழந்து விட்டதாகவும், பல விலங்குகள் இடம் பெயர்ந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான அறிக்கையே அடுத்த மாதம் தான் வெளியாகும் என்னும் நிலையில், இடைக்கால அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நீல மலைகள், கோத்வானா மழைக்காடுகள் என, உலக சுற்றுலா பிரதேசங்கள் பலவும் இந்த தீவிபத்தில் சிக்கி அழிந்தது வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி, மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்குமானது என்பதை, ஒவ்வொரு மனிதனும் நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பதே, இதுபோன்ற பேரிடர்கள் உணர்த்தும் உண்மையாகும்.