கொரோனா குறித்து இளைஞர்களிடம் உள்ள அலட்சியப்போக்கு, சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க காரணமாக அமைவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச பொருளாதாரமும் சரிவை கண்டுள்ளது. இருப்பினும் வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. தடுப்பு மருத்து கண்டுபிடிக்கும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே நோய் பரவலுக்கான காரணங்களையும் ஆராய்ந்து சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் இளைஞர்கள், கொரோனாவை அலட்சியப்படுத்துவதன் காரணமாக சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேஸஸ், உலகெங்கிலும் 17 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் பாதித்துள்ள தொற்றுநோய், முதியவர்களையும், 40 வயதுக்குமேல் உள்ளவர்களையும் அதிக அளவில் பாதித்து வருகிறது., இந்த நிலையில் தாமும் ஆபத்தில் உள்ளோம் என்பதை இளைஞர்கள் உணராமல் உள்ளனர் என தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முயற்சிப்பதில் ஒரு பெரிய சவால், இந்த ஆபத்து குறித்து இளையவர்களை உணர வைப்பது எனவும் அவர் தெரிவித்தார்.
இளைஞர்கள் தங்கள் பாதுகாப்பைக் கைவிடுவதால் சில நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என்பதற்கான சான்றுகள் இருப்பதாக தெரிவித்த அவர் இளைஞர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், மற்றவர்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.