பிரிட்டன் – சீனா அகிய நாடுகளுக்கு இடையேயான உறவு தற்போது தீவிர விஷமாக மாறியுள்ளதாக இங்கிலாந்துக்கான சீனத் தூதர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பின்னர் அமெரிக்காவுடன் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள பிளவைப் போலவே தற்போது பிரிட்டனுடனும் சீனாவுக்கு விரிசல் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என்ற அமெரிக்காவில் கூற்றை ஆதரத்த ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் உள்ளது. இதனால் சீனாவை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளையும் பிரிட்டன் மேற்கொள்ள தொடங்கியுள்ளது.
இதனிடையே ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டிருந்த தன்னாட்சி அதிகாரத்தை குறைக்கும் வகையிலான பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமல்படுத்திய விவகாரம் பிரிட்டனை மேலும் கோபத்தில் ஆழ்த்தியது. இதனை அடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீனாவின் ஹவாய் நிறுவனத்துடன் செய்துகொண்டிருந்த 5 ஜி இணைய சேவை வழங்குவதற்கான ஒப்பந்தத்தையும் பிரிட்டன் அதிரடியாக ரத்து செய்தது. இதனால் இரு நாட்டு உறவு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரிட்டன்- சீனா இடையேயான உறவு தீவிரமான விஷமாக மாறியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள இங்கிலாந்துக்கான சீனத்தூதர் லியு சியாமிங், “இங்கிலாந்தின் இறையாண்மையை சீனா மதிக்கிறது, இங்கிலாந்தின் உள் விவகாரங்களில் ஒருபோதும் தலையிடவில்லை. இங்கிலாந்தும் அவ்வாறே இருக்க வேண்டும். ஆனால் பிரிட்டன் அவ்வாறு செய்யாமல் “ஹாங்காங்கின் விவகாரங்களில் தலையிடுகிறது. இதை நிறுத்த வேண்டும். இது தொடர்ந்தால் சீனா இங்கிலாந்து உறவு மேலும் மோசமடையும்” இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இங்கிலாந்தின் 5 ஜி தடை தொடர்பாக விமர்சித்த அவர், இது இங்கிலாந்து மற்றும் சீனா உறவுகளுக்கு இருண்ட நாள் என்றும், இங்கிலாந்துக்கு இன்னும் இருண்ட நாள். ஏனெனில் 5 ஜி உள்கட்டமைப்பில் ஒரு முன்னணி நாடாக இருக்கும் வாய்ப்பை இங்கிலாந்து இழந்துவிட்டது என தெரிவித்துள்ளார்..