வைட்டமின் D’ சத்து குறைவாக உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் ஆபத்தான விகிதத்தில் தொடர்ந்து பரவி வருகின்ற நிலையில், விஞ்ஞானிகளும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் இந்த தொற்றுநோயைப் புரிந்துகொள்ள முயற்சித்து வருகிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி, பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் கொரோனாவால் (SARS-CoV-2 வைரஸ்) கடுமையான அபாயத்தில் இருப்பதாகத் தெரிகிறது. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்படுபவர்களில் வயதானவர்கள், புற்றுநோய், நாள்பட்ட சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், இருதய நிலைமைகள், நீரிழிவு நோய் மற்றும் பலவீனமான உடல் அமைப்பு (நோயெதிர்ப்பு அமைப்பு) உள்ளவர்கள், நீண்டகால உடல் நிலை பாதிக்கப்பட்டு போராடுபவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு செல்கிறார்கள்.
இப்போது, இரத்த பிளாஸ்மாவில் குறைந்த அளவு வைட்டமின் டி .இருந்தால் கொரோனா (COVID-19) நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. லுமிட் ஹெல்த் சர்வீசஸ் (எல்.எச்.எஸ்) மற்றும் பார்-இலன் பல்கலைக்கழகத்தின் அஸ்ரீலி மருத்துவ அமைப்பின் இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் (Leumit Health Services (LHS) and the Azrieli Faculty of Medicine of Bar-Ilan University ) இந்த தகவலை தெரிவித்தனர்.
இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் 7,807 பேரின் வைட்டமின் டி அளவை ஆய்வு செய்தனர், அவர்களில் 782 (10.1%) பேர் COVID-19 நோயாளிகள் மற்றும் மீதமுள்ளவர்கள் தொற்று நோய்க்கு எதிர்மறையாக சோதனை செய்தவர்கள் ஆவர். ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வில், கொரோனா தொற்று பாசிட்டிவ் வந்தவர்களுக்கு., COVID-19 நெகட்டிவ் வந்தவர்களை விட பிளாஸ்மா வைட்டமின் d அளவு கணிசமாகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த ஆய்வு FEBS ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.
பாலினம், வயது, நாள்பட்ட மன மற்றும் உடல் கோளாறுகள் மற்றும் சமூக பொருளாதார நிலை போன்ற பிற காரணிகளில் எந்த பிரச்சனை இல்லை என்றாலும்., குறைந்த அளவு வைட்டமின் டி உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு போலவே இதற்கு முன் ஏஜிங் கிளீனிக்கல் இதழ் வெளியிட்ட ஆய்விலும் வைட்டமின் D சத்து உடலில் அதிகமாக இருந்தால் கொரோனாவை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும். அதேசமயம் இந்த தொற்றால் இறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் வைட்டமின் D சத்து சூரிய வெளிச்சத்தின் மூலமாக இயற்கையாகவே கிடைக்கக் கூடியது. எனவே தினமும் காலை அல்லது மாலையில் வெளியில் 20 நிமிடம் சூரிய குளியல் நடப்பது நல்லது. அதேபோல் முட்டை, காளான் போன்ற உணவுகளிலும் வைட்டமின் D சத்து அதிகமாக உள்ளது. அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.