அமெரிக்காவில் ஒவ்வொரு ஒரு நிமிடத்துக்கும் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 1,50,000 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அமெரிக்காவில் இன்னும் இறப்பு அதிகரித்து வருவது அந்த நாட்டை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை 1,456 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே 27ஆம் மாதத்திற்குப் பின்னர் ஏற்பட்ட ஒரு நாள் உயிரிழப்புகளில் இதுதான் அதிகம். கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்காவில் கொரோனா இறப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் 10,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகரித்து வந்தாலும், ஒவ்வொரு வாரமும் அதிகரிக்கும் தொற்று சதவீதம் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதத்தில் அரிசோனா, கலிபோர்னியா, புளோரிடா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொது முடக்கம் இருந்த காரணத்தினால், தொற்று பரவல் குறைந்து இருந்தது. தற்போது பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் திறக்கப்பட்டு இருப்பதால், தொற்று பரவலும் அதிகரித்துள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தில் மட்டும் இம்மாதத்தில் 4,300 பேர் உயிரிழந்துள்ளனர். புளோரிடாவில் 2,900 பேரும், கலிபோர்னியாவில் 2,700 பேரும் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ், புளோரிடா, கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் இம்மாதத்தில்தான் தொற்று அதிகரித்துள்ளது. நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்களில் மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 32,600 பேர் உயிரிழந்து உள்ளனர்.
உலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது அமெரிக்கா ஆறாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு லட்சம் பேருக்கு 45 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன், இத்தாலி, பெரு, ஸ்பெயின், சிலி ஆகிய நாடுகளில் உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.