அமெரிக்காவில் 60 மில்லியன் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் 11 மில்லியன் பேருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக பரிசோதனைகள் செய்வதால்தான் தொற்று எண்ணிக்கை அதிகம் இருப்பதாக அதிபர் ட்ரம்ப் கூறி வருகிறார். ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் கொரோனாவை சமாளிப்பதில் தோல்வியடைந்ததால் பாதிப்பு உயர்வதாக மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை இந்தியாவுடன் ஒப்பிட்டு ட்ரம்ப் பேசியுள்ளார். அமெரிக்காவில் சுமார் 60 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் இந்தியாவில் 11 மில்லியன் மக்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா கிட்டத்தட்ட 6 மடங்கு கூடுதலான பரிசோதனைகளை மேற்கொண்டதாக ஒப்பிட்டுள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தரவுகள்படி, இந்தியாவில் 1,81,90,382 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்காவில் நாளொன்றுக்கு 8,10,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை விட 4 மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் குறைவான பரிசோதனையே நடத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னதாக கடந்த 23ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக பாராட்டியிருந்தார். தற்போது அதனை தனது நாட்டுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.