திரிபுரா மாநில தலைநகர் அதர்தலாவில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனையின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலம் முஹுரிபூர் கிராமத்தைச் சேர்ந்த 31 வயதான நபர் ஒருவர், நேற்று விஷம் அருந்தியதால் அதர்தலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு விரைவான ஆன்டிஜென் பரிசோதனையை மருத்துவர்கள் வழங்கினர். இதனை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் நேற்று இரவு 11 மணியளவில் கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனக்கு கொரோனா ஏற்பட்டதால் விரக்தியடைந்த அந்த நபர் நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அவரை மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் இன்று அதிகாலை அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த நபர் சில காரணங்களுக்காக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுவரை, மருத்துவமனையில் துன்புறுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்கள் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, என தெரிவித்துள்ளனர்.
இதே மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் கொரோனா பாதிக்கப்பட்ட வயதான பெண்மனி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.