கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் டெல்லியை முன்மாதிரியாகக் கொண்டு அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.
கச்சிபவுலியில் உள்ள தெலங்கானா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தற்போது மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பார்வையிட்டார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பரிசோதனை, தடமறிதல் மற்றும் சிகிச்சை என்ற முறையை தெலங்கானா அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இங்கு பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் கூறினார்.தேவையான அளவு பிபிஇ கருவிகளும், வென்டிலேட்டர்களும் தெலங்கானாவிற்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பது, நோயைக் வேகமாகக் கட்டுப்படுத்தும். யூனியன் பிரதேசமான டெல்லியை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். அங்கு கொரோனா மீட்பு விகிதம் 84% ஆக உள்ளது. இதனால் டெல்லியை அனைத்து மாநிலங்களும் முன்மாதிரியாக எடுத்து செயல்பட வேண்டும். கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவ வல்லுநர்களை மாநில அரசு கவனித்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதை அனைத்து மருத்துவமனைகளும் உறுதி செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்திற்கு மத்திய அரசு 1,200 வென்டிலேட்டர்களை வழங்கியுள்ளதாகவும், N-95 முகக்கவசங்கள், PPE கருவிகள் மற்றும் HCQ மாத்திரைகள் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர், கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் சேவையை பாராட்டும் விதமாக, அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கிஷண் ரெட்டி வலியுறுத்தினார்.