மகாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து மீண்ட 100 வயது மூதாட்டி வீடு திரும்பிய 3 நாட்களில் உயிரிழந்தது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் கடந்த ஜூலை 20ம் தேதி 100 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கும் தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதிக வயது காரணமாக மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதனையடுத்து ஜூலை 28ம் தேதி மூதாட்டி உள்ளிட்ட குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். 100 வயதில் கொரோனாவை வென்ற மூதாட்டிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. அவரது மன உறுதி, பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் வீடு திரும்பிய மூதாட்டி, 3 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மூதாட்டி கொரோனா அறிகுறிகள் இல்லாமல்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் சில நாட்களுக்கு பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் பெற்று தொற்றில் இருந்து மீண்டு வந்ததாகவும் கூறியுள்ளனர். மூதாட்டி கொரோனாவால் உயிரிழந்தாரா அல்லது வயது மூப்பு காரணமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.