கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து சிரமப்பட்டு வந்த ஒருவருக்கு 31 கோடி ரூபாய் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் உலகமே திணறி வருகிறது. நோயின் தாக்கத்துடன் பெரும் பொருளாதார நெருக்கடியையும் கொரோனா ஏற்படுத்தியுள்ளது. வேலையிழப்பால் தனி மனிதர்களும், போதிய வரிவருவாய் இன்றி அரசாங்கங்களும் நிதிச் சிக்கலில் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வேலையிழந்த நபருக்கு மிகப்பெரும் அதிர்ஷடம் அடித்துள்ளது. அந்நாட்டில் செக்யூரிட்டி அலுவலராக பணியாற்றி வந்த அவர், கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து சிரமப்பட்டு வந்துள்ளார். இதனிடையே தனது மகளுடன் மளிகை வாங்க கடைக்கு சென்ற அவர், தனது அதிர்ஷ்டத்தை சோதிக்கும் வகையில் அங்கு ஒரு லாட்டரி வாங்கியுள்ளார். அந்த லாட்டரிக்கு தற்போது ரூ.31 கோடி பரிசு விழுந்துள்ளது.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அந்த நபர், வாழ்க்கை என்பதே ஒரு கனவு என்று என எப்போதும் சொல்லி வந்ததாகவும், இது அதனை உறுதிப்படுத்துவது போல் உள்ளதாகவும் கூறியுள்ளார். உடனடியாக வீட்டிற்கு சென்று தனது மகளை கட்டி அணைத்துக் கொஞ்ச விரும்புவுதாக தெரிவித்துள்ளார். லாட்டரியில் பரிசு பெற்றவர்கள் குறித்து செய்தித்தாள்களில் படித்து வந்த நானே, தற்போது அந்த செய்தியில் இடம்பெறுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர், பரிசுப் பணத்தில் தனது சகோதரருக்கு வீடு வாங்கிக் கொடுக்க உள்ளதாகவும், இடைநிறுத்தப்பட்ட வணிகவியல் படிப்பை மீண்டும் தொடங்கி, தனது பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து கற்றுக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நியூசிலாந்தில் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.47 கோடியும், வேலையிழந்த பெண் ஒருவர் முகக்கவசம் தயாரித்து விற்று கிடைத்த பணத்தில் வாங்கிய லாட்டரியில் ரூ.96 லட்சம் பரிசு விழுந்ததும் குறிப்பிடத்தக்கது. ஊரடங்கால் பலரும் அவதியடைந்து வரும் நிலையில் இது போன்று சிலருக்கு அதிர்ஷ்டம் அடிப்பது சற்று ஆறுதலான செய்தியாக பார்க்கப்படுகிறது.