இத்தாலியில் 96 வயதான முதியவர் ஒருவர் பல்கலைக்கழகப் பட்டம் வாங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலக்கை எட்டிப் பிடிப்பதற்கும், நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் வயது தடையாக இருக்காது. அதற்கு இத்தாலியில் நடந்துள்ள ஒரு சம்பவமே சான்று. 96 வயதான கியூசெப் பட்டர்னோ என்பவர், சிறுவயது முதல் வாழ்க்கையில் பல சோதனைகளை எதிர்கொண்டார். வறுமை, போர் என பல இன்னல்களை தாண்டி வந்த அவர், தற்போது இத்தாலியில் முதுமையான வயதில் பல்கலைக்கழக பட்டம் வாங்கியவராக மாறியுள்ளார்.
இவர் குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது கடற்படையில் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன்பிறகு ரயில்வே ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது இன்றைய தலைமுறை மாணவர்களுடன் சேர்ந்து படித்து, பட்டம் பெற்றுள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவருடன் படித்தவர்கள் அனைவரும் அவரை விட 70 ஆண்டுகள் குறைவான வயது உடையவர்கள். தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், ‘மற்றவர்கள் போல் நானும் சாதாரண நபர். எனது 90 வயதில் வரலாறு மற்றும் தத்துவத்தில் பட்டம் பெற நினைத்து கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் என்னால் படிப்பை தொடர முடியவில்லை.
அதன்பிறகு 2017ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தேன். மூன்று வருட பட்டம் பெறுவதற்கு சற்று தாமதமாகிவிட்டது என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால் இதனை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. அறிவு என்பது நாம் தினமும் எடுத்துச் செல்லும் சூட்கேஸ் போன்றது. அது ஒரு புதையல். புத்தகங்கள் எழுத வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதேபோல் நூல்களை படித்து ஆராய்ச்சி செய்யவும் திட்டமிட்டுள்ளேன்’என்றார்.
பல இன்னல்களையும் கடந்து தனது இலக்கை அடைந்த முதியவருக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். அவர் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் முன்மாதிரியாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளனர்.