தைவானைச் சேர்ந்த வயதான தம்பதியர் சலவையகத்தில் இருக்கும் ஆடைகளை பயன்படுத்தி மாடலிங் செய்வது நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராமில் வெளியாகும் தைவானைச் சேர்ந்த தம்பதியின் புகைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம் அவர்களது வயது. 83 வயதான சாங் வான் ஜி மற்றும் 84 வயதான ஹ்சு-ஷோ-எர் தம்பதியர் பல ஆண்டுகளாக சலவையகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் சிலர் துணிகளை கொடுத்துவிட்டு அதனை வாங்காமல் இருந்துள்ளனர். ஆனால் இந்த தம்பதியருக்கு அந்த துணிகளை தூக்கி எறிய மனம் வரவில்லை. எனவே அந்த ஆடைகளை சேமித்து வைக்க ஆரம்பித்தனர்.
இதனிடையே அவர்களது பேரன், இந்த துணிகளை எப்படி பயன்படுத்தலாம் என ஒரு யோசனை கொடுத்துள்ளார். அதற்கேற்றார் போல் அந்த வயதான தம்பதியர் விதவிதமான ஆடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் தற்போது அவர்களை சுமார் 6 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். மாடலிங் செய்வதற்கு ஏற்றாற்போல் உடைகளை மாற்றி அழகாக அணிந்து காண்போர் கண்களை கவர்ந்து வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்துள்ள அந்த தம்பதி, இந்த ஆடைகளை அணிகையில் 30 வயது குறைந்ததை போல் உணர்வதாக கூறியுள்ளனர். தங்களை பார்த்து மற்றவர்கள் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள அவர்கள், வயதாகி விட்டாலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு தாங்கள் ஒரு சான்றாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர்.பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த தம்பதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் பின்தொடர ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.