மெக்ஸிகோவில் ஊழல் முழுமையாக நீங்கிய பிறகே முகக்கவசம் அணிவேன் என அந்நாட்டு அதிபர் லோபஸ் ஓப்ரடார் தெரிவித்துள்ளார்.
மெக்ஸிகோவில் கொரோனா பரிசோதனை தீவிரமாக இல்லை என்றும், குறைவான நபர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அந்நாட்டு அதிபரும் பொது இடங்களுக்கு வரும் போது முகக்கவசம் அணியாமல் வருவது பலரது விமர்சனங்களுக்கும் உள்ளானது. அதிபரே இவ்வாறு நடந்து கொண்டால் மக்களுக்கு அது தவறான முன்னுதாரணமாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். அதே போல் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மக்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என அவர் ஊக்குவில்லை.
இதனால் எதிர்க்கட்சிகளின் விமர்சனம் அதிகரித்த நிலையில் தற்போது அதிபர் லோபஸ் ஓப்ரடார் செய்தியாளர்களுக்கு இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதில், ‘நான் எப்போது முகக்கவசம் அணியப் போகிறேன் என்பது உங்களுக்கு தெரியுமா? நாட்டில் ஊழல் இல்லாத நிலைமை வந்த பிறகுதான் முகக்கவசம் அணிவேன். ஊழலை விரைவாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் முகக்கவசம் அணிய விரும்பாததால்தான் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதாக குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சியினர், மெக்ஸிகோவில் ஊழல் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாக கடந்த நவம்பர் மாதம் அதிபர் பேசியதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மெக்ஸிகோவில் இதுவரை 4,34,193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 47,472 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.