ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றால் வறுமை நிலைக்கு தள்ளப்படுவோரின் விகிதம் 55% இருந்து 80% சதவீதமாக அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது.
தெற்காசியாவில் பயங்கரவாதம், வறுமை, பெண்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது. இங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான்களுடன் நடந்துவரும் போர், அந்நாட்டை முற்றிலும் சீர்குலையச் செய்துள்ளது. அங்குள்ள பல மாகாணங்களில் வேலையின்மை மற்றும் வறுமையால் மக்கள் வாடி வருகின்றனர். இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு மற்றும் சர்வதேச அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இது பெரிய அளவிலான மாற்றங்களை தரவில்லை.ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் குறைவாக உள்ளதால் அங்கு குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இது அந்நாட்டை பின்னோக்கிய நிலைக்கு மீண்டும் கொண்டு சென்று வருகிறது. வாழ்வாதாரமின்மை மற்றும் பயங்கரவாதத்துக்கு மத்தியில் சிக்கியுள்ள ஆப்கான் அரசு எதுவும் செய்ய முடியாமல் திணறி வருகிறது.
இந்நிலையில் இதற்கு வழுசேர்க்கும் வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அமைந்துள்ளது. கொரோனாவுக்கு முன்னர் 55% ஆக இருந்த அந்நாட்டின் வறுமை விகிதம் தற்போது 80% தொடும் அளவுக்கு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.. இது குறித்து தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் புனரமைப்புக்கான சிறப்பு ஆய்வாளர் அலுவலகம் (SIGAR), ஆப்கானிஸ்தானில் பரவிவரும் கொரோனா தொற்று “ஒரு மனிதப் பேரழிவிற்கு வழிவகுக்கிறது” என்று எச்சரித்துள்ளது.
அதிகரிக்கும் வேலையின்மை, எல்லை மூடல் காரணமாக உணவு வழங்கல் தடைகள் மற்றும் உணவு விலைகள் அதிகரிப்பது உள்ளிட்ட தொற்றுநோய்களால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, ஆப்கானியர்களின் உணவுப் பாதுகாப்பின்மையை அதிகப்படுத்தியுள்ளது, இது ஏற்கனவே நடந்து வரும் மோதல்கள் மற்றும் உயர் வறுமை மட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆப்கானிஸ்தானில் இல்லை. தற்போது நாடு முழுவதும் 300 வென்டிலேட்டர்கள் மட்டுமே கிடைக்கின்றன, தலைநகரில் ஆக்ஸிஜன் சப்ளைக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது. தொற்றுநோய் காரணமாக ஆப்கானிஸ்தான் மந்தநிலைக்குள் நுழைந்திருக்கலாம், நடப்பாண்டின் பொருளாதாரம் 10 சதவீதம் வரை சுருங்கக்கூடும்” இவ்வாறு சிகார் (SIGAR), அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் மதிப்பிடப்பட்ட 32.2 மில்லியன் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமை அல்லது உணவுப் பாதுகாப்பின்மை நிலையில் தற்போது உள்ளனர் எனவும் கூடுதலாக 8 மில்லியன் மக்கள் வறுமையில் வீழ்வார்கள் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர், இது வறுமை விகிதத்தை 55 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக உயர்த்தும் என கூறப்படுகிறது.
இதுவரை அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் 36,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1,271 பேர் சிகிச்சை பலனின்றி உயிரி்ழந்துள்ளனர்.