சுவையான மற்றும் சத்தான மாம்பழம்- மாதுளை ஸ்மூத்தி எப்படி தயார் செய்வது என்பதை இதில் காண்போம்.
பழங்களை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள் ஸ்மூத்தி போல் தயாரித்து குடிக்கலாம். குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். நீங்கள் இதனை தயாரிக்க சேர்க்கும் அனைத்து பொருட்களிலுமே பலவித சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தவும் ஸ்மூத்தி உதவும். பெரும்பாலானோருக்கு மாம்பழம் என்றால் ரொம்ப பிடிக்கும். அதையே வித்தியாசமாக கூடுதல் சுவை சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். மாம்பழத்துடன் மாதுளை பழம் சேர்த்து ஸ்மூத்தி ரெடி பண்ணி பாருங்கள். இவை இரண்டிலும் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
மாம்பழம் உங்களுக்கு இனிப்பு சுவையை கொடுக்கும் போது, மாதுளை மிதமான புளிப்பு சுவையை கொடுக்கும். இதுமட்டுமல்லால் இதில் நாம் வேறு சில பொருட்களும் சேர்க்கப் போகிறோம். மாம்பழம்- மாதுளை ஸ்மூத்தி எப்படி தயாரிக்கலாம் என்பதை தற்போது காணலாம்.
தேவையான பொருட்கள்:
2 மாம்பழம், 1 கப் மாதுளை, 1 கப் பால், 1 கிளாஸ் குளிர்ந்த நீர், 2-3 பாதாம் (வெதுவெதுப்பாக நீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள்). 1 டீஸ்பூன் தேன், புதினா இலைகள்.
செய்முறை:
மாம்பழம், மாதுளை, பால், தண்ணீர், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு இந்த கலவையை வடிகட்டி பாதாம் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் முந்திரி, உலர் திராட்சையும் பயன்படுத்தலாம். இதனை நன்றாக கலந்து புதினா இலைகள் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும். உங்களுக்கு அதிக குளிர்ச்சி தேவையில்லையென்றால் ஐஸ் கட்டிகளை தவிர்த்துக் கொள்ளலாம்.
இந்த சுவையான மாம்பழம்- மாதுளை ஸ்மூத்தியை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுங்கள். சில நிமிடங்களிலேயே இதனை தயார் செய்து விடலாம். இயற்கையான, சத்தான பொருட்கள் மட்டுமே இதில் சேர்க்கப்படுவதால் உங்கள் உடலுக்கு நல்ல பலனை தரும்.




















