தென் கொரியாவில் தொடர்ந்து 40 நாட்கள் கொட்டித் தீர்த்த பேய் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 30 பேர் மரணமடைந்த நிலையில் பலர் மாயமாகியுள்ளனர்.
பேய் மழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக நாட்டின் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பலர் மண்ணுக்குள் உயிருடன் புதைந்துள்ளதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவமழையை தென் கொரியா எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அதிகாரிகள்,
கடந்த 48 மணி நேரத்தில் 13 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் கடந்த 30 ஆண்டுகளில் பதிவான சராசரியை விட நான்கு மடங்கு மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதால் பொதுமக்கள் உயிர் காக்க தத்தளித்து வருகின்றனர்.
மிகுந்த ஆபத்தான பகுதிகளில் இருந்து இதுவரை 5,000 பொதுமக்கள் வரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தென் பகுதியில் விடாது பெய்யும் மழையால் இயல்பு வாழ்க்கை மொத்தமாக ஸ்தம்பித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி மழை இன்னும் தொடரும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தீவான ஜெஜுவைத் தவிர எஞ்சிய ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
விமான நிலையங்கள் பல தண்ணீரில் மூழ்கியுள்ளதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் கன மழை எதிர்பார்க்கப்படுவதால், குடியிருப்புகளின் அடித்தளங்கள், பள்ளமான பகுதிகள் மற்றும் ஆறுகளில் இருந்து விலகி இருக்குமாறு சியோல் நகரம் மக்களை அதிகாரிகள் தரப்பு எச்சரித்துள்ளது.




















