ஜனாதிபதியின் சிறப்பான நிர்வாகத் திறமையே பொதுஜன பெரமுனவின் வெற்றிக்குக் காரணம் என ஜனாதிபதியின் வெளிநாட்டலுவல்கள் மேலதிக செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
‘கடந்த எட்டு மாதங்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை சிறப்பாக நிர்வகித்த விதம் அனைவரினதும் மனதைக் கவர்ந்துள்ளது. அதுவே பொதுஜன பெரமுனவின் இன்றைய வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது.
கொவிட்-19 தொற்று பரவாது கட்டுப்படுத்த ஜனாதிபதி சரியான நேரத்தில் எடுத்த முடிவுகளே கொரோனா அச்சுறுத்தல் தணிவதற்கு காரணமாகும்.
ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்று பல விவாதங்கள் மக்களிடையே கடந்த காலங்களில் நடைபெற்றன. அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.
அவரது எளிமையான வாழ்க்கை, ஆடம்பரமற்ற ஆடை அணிகலன்கள், போலி கௌரவம் இல்லாமை என்பவற்றை கண்ட மக்கள் தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அவர் மிகப் பொருத்தமானவர் என்று எண்ணுகின்றார்கள்.
இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 145 ஆசனங்கள் கிடைத்தன. அவ்வாறு பெற்ற வெற்றி சிங்கள பௌத்த வாக்குகள் மட்டுமின்றி சிறுபான்மையினரும் அவர் மீது வைத்த நம்பிக்கையினால் கிடைத்ததாகவே தோன்றுகின்றது. நாட்டு மக்கள் யாவரும் தேசிய பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்துள்ளார்கள்.
ஜனாதிபதியின் முதலாவது தொனிப்பொருள் தேசிய பாதுகாப்பாகும். இரண்டாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியாகும். நாட்டின் பொருளாதாரம் குறித்த அவருடைய கருத்து யாதெனில் முன்னர் காணப்பட்ட இறக்குமதி பொருளாதாரத்துக்குப் பதிலாக சுதந்திரமான உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகும். முக்கியமாக விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதே அவரது முக்கிய குறிக்கோளாகும்
நாடு பெரும் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. ஆனாலும் ஜனாதிபதிக்கு பலமான அரசாங்கமொன்று கிடைத்துள்ளது. அதில் அனுபவம் வாய்ந்த மற்றும் புதிய முகங்கள் பலவற்றையும் காணக் கூடியதாகவுள்ளது. நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்ல விரைவாக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்பதே நாட்டின் நம்பிக்கையாகும்’.
இவ்வாறு ஜனாதிபதியின் வெளிநாட்டலுவல்கள் மேலதிக செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.