முல்லைத்தீவு கொக்கிளாய் கிராமத்தினை சேர்ந்த மக்களின் பூர்வீக காணிகள் அபகரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி கொக்கிளாய் கிராம மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றினை கையளித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் முன்பாக இருந்து மாவட்ட செயலம் வரைகவனயீர்ப்பாக சென்ற மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் மாவட்ட அரசாங்க அதிபருக்கான மனுவினை மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் கையளித்துள்ளார்கள். கொக்கிளாய் கிராம மக்களின் மனுவில்,
கொக்கிளாய் கிராமத்தில் வசிக்கும் மக்களின் விவசாயம் செய்யும் வயல் காணிகளையும் வாழ்வாதார குடியிருப்பு காணிகளையும் இலங்கை கனியவள நிறுவனம் அபகரித்து நிக்கின்றது.
அதேபோல் கடற்படையினரும் தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரித்து முகாம் அமைத்து வருகின்றார்கள்.
மறுபக்கத்தில் தென்னிலங்கையில் இருந்து வருகைதந்த சிங்கள மீனவர்கள் தமிழர்களின் குடியிருப்பு காணிகளையும் வாழ்வாதார காணிகளையும் அனுமதியற்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் அடாத்தாக பிடித்து வீடுகளை அமைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இதன் பின்னணியில் அரசாங்கமும் படையினரும்,கடற்படையினரும் திரைமறைவில் எமக்கு எதிராக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
நாள்தோறும் தமிழர்களின் காணிகள் மெல்லமெல்ல ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.
நாங்கள் ஊரை விட்டு அகதிகளாக வெளியேறிவிடும் பரிதாப நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
எமது மூதாதையர்கள் செய்த விவசாய காணியினை மூன்றாவது தலைமுறை செய்கை பண்ணி வருகின்றோம் மீள்குடியேற்றத்தின் பின்னர் எங்கள் காணிகள் அளந்து அடையாளப்படுத்தி தருவதாக சிலரிடம் கையெழுத்து பெற்று சென்றார்கள் எதுவும் நடக்கவில்லை.
ஆனால் கனியவள நிறுவனம் தொடர்ந்தும் அளவிற்கும் அதிகமான தமிழ்மக்களின் காணிகளை அத்துமீறி கையகப்படுத்திவருகின்றார்கள்.
எனவே இதனை கவனத்தில் கொண்டு காணிகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.