பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் பாரிய பின்னடைவை சந்தித்த நிலையில் இன்றைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு அவசரமாக கூடுகின்றது.
திருகோணமலையிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியில் அலுவலகத்தில் முற்பகல் 11 மணிக்கு கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதனை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் உறுதிப்படுத்தியதோடு, அரசியல் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அந்தவகையில் இன்றைய கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, மூத்த உறுப்பினர் சீ.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், செல்வநாயகம், சத்தியலிங்கம், குலநாயகம் உள்ளிட்ட 09 பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதேவேளை, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை உடன் கூட்டுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எனினும் அரசியல் குழு கூட்டத்தையடுத்தே மத்திய குழு கூட்டத்தை கூட்டுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளதோடு கட்சியின் செயலாளரான கி.துரைராஜசிங்கமும் மத்திய குழுக் கூட்டம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லையென்றும் குறிப்பிட்டார்.
நிறைவடைந்துள்ள 09ஆவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடக்கு, கிழக்கில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் வாக்கு வங்கியில் பாரிய சரிவு ஏற்பட்டு 09ஆசனங்கள் நேரடி மக்கள் வாக்களிப்பில் கிடைத்திருந்தன. அத்துடன் ஒரு தேசியப் பட்டியல் ஆசனமே கிடைத்துள்ளது.
இந்நிலையில் தமிழரசு கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசா இம் முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படாத நிலையில் தமிழரசு கட்சியின் மற்றும் சில முன்னாள் உறுப்பினர்கள் இம் முறை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறன நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தவராசா கலையரனை நியமித்ததையடுத்து கட்சிக்குள் முறுகல்கள் உச்சம் பெற்றுள்ளது.
குறிப்பாக கலையரசனை தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமித்து அதிவிசேட வர்த்தமானி வெளிவந்துள்ள நிலையில் கட்சிக்குள் காணப்பட்ட முறுகல் மேலும் உச்சம் பெற்றிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா பரிந்துரைக்கப்பட வேண்டும் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட், ரெலோ ஆகியன அறிவித்திருந்ததோடு, தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்டக் கிளையும் அதே தீர்மானத்தை எடுத்திருந்தது.
எனினும், சம்பந்தன் எடுத்த தீர்மானம் மாற்றப்படவில்லை என்பதோடு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலையரசனின் பெயரும் மீளப்பெறப்பட்டிருக்கவில்லை.
இந் நிலையில் இன்றைய இக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சி குறிப்பாக தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பாக ஆராயப்படவுள்ளது.
அத்துடன் தமிழரசு கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாகவும், தேசியப் பட்டியல் விடயம் தொடர்பாகவும் ஆராயப்படும் எனவும் தெரியவருகின்றது.