அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை இரத்து செய்வதற்கான அரசியலமைப்பின் 20வது திருத்தம் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த எட்டு வாரங்களுக்குள் 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“20வது அரசியலமைப்பு திருத்தம் தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்றி தற்போதைய அரசியலமைப்பு திருத்தத்திற்கான ஆரம்ப வரைவை ஏற்கனவே தயாரித்துள்ளார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
19வது திருத்தம் இரத்து செய்யப்படுவதால், 18வது திருத்தம் நடைமுறைக்கு வரும். எனினும், பல முக்கிய உட்பிரிவுகளும் திருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் 18வது திருத்தத்தின் படி ஆறு ஆண்டுகள் ஆகும், எனினும், 20வது திருத்திலும் 19வது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது போன்று ஐந்து ஆண்டுகளாகவே கட்டுப்படுத்தப்படும்.
20வது திருத்தத்தில் 19வது திருத்தத்தைப் போலவே ஒரு நபர் ஜனாதிபதி பதவிக்கு எத்தனை முறை போட்டியிட முடியும் என்பதைக் கட்டுப்படுத்தும் விதிகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு திருத்தம் மூலம், ஜனாதிபதி பதவிகளை வகிக்க சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுவதுடன், இரட்டை குடியுரிமை கொண்டவர்களும் தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலை உருவாகும்.


















