பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் 10 முதல் 12 நாட்களில் இயல்பாக சுவாசிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என் மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (75) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை எம்.ஜி.எம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு, தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அவருக்கு, உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கிக்கொண்டிருப்பினும் நுரையீரல் செயல்பாடு இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக, உயிர்காக்கும் உபகரணங்கள் வாயிலாக தொடர்ந்து ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நெருக்கடியான நிலையை குறிப்பிடும் விதமாகவே மருத்துவ ரீதியாக, கிரிட்டிக்கல் என, ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, மருத்துவ அறிக்கை வெளியிட்டதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
தற்போது போன்றே, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில், சேதமடைந்த நுரையீரலின் செயல்திறன் அதிகரித்து சீரான நிலைக்கு திரும்பும் என தெரிகிறது.
மேலும் அவரால், 10 முதல் 12 நாட்களில் இயல்பாக சுவாசிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக்கூறும் மருத்துவர்கள் அந்த நல்ல நாளுக்காகவே நாங்களும், அவரது பல லட்சம் ரசிகர்களும் காத்திருக்கிறோம் என கூறியுள்ளனர்.



















