யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது ஏற்கனவே மீட்கப்பட்ட மனித எச்சத்தின் சில கால்ப்பகுதி மீட்கப்பட்டுள்ளதுஎன்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டடி மீனாட்சி அம்மன் ஆலய வீதி பகுதியில் தனியார் காணியொன்றில், கடலுணவு ஏற்றுமதி நிறுவனம் ஒன்று கொட்டகை அமைத்த போது மனித எச்சங்கள் அண்மையில் மீட்கப்பட்டன.
அந்த இடத்தில் ஆய்வு செய்ய பொலிசார் தாக்கல் செய்த பி அறிக்கையின்படி, இன்று யாழ் நீதிமன்ற பதில் நீதிவான், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் அகழ்வு பணி இடம்பெற்றது.
இதன்போது, ஏற்கனவே பெண்ணொருவரின் ஆடைகள் மற்றும் எலும்புகள் மீட்கப்பட்ட பகுதியில், கால் பகுதி எச்சங்கள் மீட்கப்பட்டன.
அத்துடன், பெண்களின் இரண்டு மேலாடைகள், சீப்பு, பவுடர் உள்ளிட்ட பெண்களின் பொருட்கள் அடங்கிய துணிப்பையொன்றும் மீட்கப்பட்டது.
பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு அங்கு புதைக்கப்பட்டிருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்வுக்காக கொமும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.


















