இலங்கை கிரிக்கெட் அணி ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டை அவரிடமே கேட்க வேண்டுமென இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றில் சங்கக்கார கலந்துகொண்டிருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, உள்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இலங்கை அணி இந்த ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அதுகுறித்து விசாரணை நடத்தவும் அரசாங்கம் பணித்தது.
இதனையடுத்து விளையாட்டுத்துறையில் இடம்பெறும் மோசடிகளைத் தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்ததோடு, இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, உப்புல் தரங்க உள்ளிட்ட பலரும் அழைக்கப்பட்டு பலமணிநேரம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
அத்துடன் 2011ஆம் ஆண்டில் இலங்கை அணியின் தெரிவுக்குழுத் தலைவராக செயற்பட்ட அரவிந்தடி சில்வாவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
இந்த விசாரணைகள் குறித்து மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலைகள் ஏற்பட்டதோடு, கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கம் மீதும் எதிர்ப்புக்கள் எழும்பின.
இதன் காரணமாக ஆட்டநிர்ணயம் இடம்பெற்றமைக்கு ஆதாரங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டு விசாரணைகளும் கைவிடப்பட்டன.
இந்த நிலையில், கண்டியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவிடம் ஊடகவியலாளர்கள் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு குறித்து வினா எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், அந்த குற்றச்சாட்டு குறித்து முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிடமே விளக்கம் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சராக கடமைகளை இன்றைய தினம் ஆரம்பித்த நாமல் ராஜபக்சவுக்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.


















