கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளதாகவும், சோதனை வெற்றியில் முடிந்தால் நாட்டின் மொத்த மக்கள் தொகையான 25 மில்லியன் மக்களுக்கும் இலவசமாக வழங்க முடியும் என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் பிரபல மருந்து நிறுவனமான AstraZeneca-வும் இணைந்து உருவாக்கி வருகின்றனர்.
மருத்துவ ரீதியாக குறித்த மருந்து வெற்றிபெற்றால், அவுஸ்திரேலிய மக்களுக்காக AstraZeneca நிறுவனத்திடம் இருந்து மிக விரைவில் மருந்து வரவழைக்கப்படும் என பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இதுவரை கொரோனா பெருந்தொற்றால் 400-கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டதுடன் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் இன்னும் 7,000 பேர் கொரோனா பெருந்தொற்றால் சிகிச்சையில் உள்ளனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் AstraZeneca நிறுவனமும் இணைந்து உருவாக்கப்படும் தடுப்பு மருந்துக்காகவே உலகின் பெரும்பாலான நாடுகள் காத்திருக்கின்றன.
இந்த தடுப்பூசி வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், நாங்கள் எங்கள் சொந்த நிபுணர்களின் கீழ் உடனடியாக தடுப்பூசிகளை தயாரித்து வழங்குவோம்,
மேலும் 25 மில்லியன் அவுஸ்திரேலியர்களுக்கும் இதை இலவசமாக்குவோம் என்று பிரதமர் மோரிசன் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான மொத்த செலவு எவ்வளவு என்பது இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
இருப்பினும் 18 மில்லியன் டொலர் அளவுக்கு ஒரு அமெரிக்க நிறுவனத்துடனும் அவுஸ்திரேலியா ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும், கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் AstraZeneca நிறுவனத்துடன் முன்னெடுத்த ஒப்பந்தம் அவுஸ்திரேலியா கையெழுத்திட்ட அத்தகைய முதல் தடுப்பூசி ஒப்பந்தமாகும்.