பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (75) கொரோனா தொற்றுக்குள்ளாகி, சென்னை, எம்.ஜி.எம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
அவருக்கு, உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் உறுப்புகள் சீராக இயங்குவதாகவும், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த, உயிர் காக்கும் உபகரணங்கள் வழியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
தற்போது மருத்துவர்கள் கூறுகையில், சிகிச்சைக்கு அவரது உடல் நல்ல முறையில் ஒத்துழைக்கிறது. அதனால், தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை தொடர முடிவு செய்துள்ளோம்.
சர்வதேச மருத்துவக் குழுவினரின் ஆலோசனை தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது. அனைவரின் பிரார்த்தனையும் பலிக்கும் விதமாக, விரைவில் எஸ்.பி.பி., குணமடைவார் என நம்புகிறோம் என கூறியுள்ளனர்.
எஸ்.பி.பி. குணமடைய வேண்டும் என கூறி இயக்குனர் பாரதிராஜா, நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார் போன்ற பல திரைப்பிரபலங்கள் வீடியோ வெளியிட்டு உருக்கமுடன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.



















