அரசாங்க நிறுவனங்களில் மோசமான மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார்.
காலி பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் தென் மாகாணத்திலுள்ள சகல பொலிஸ் பிரிவுகளில் உள்ள பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த கலந்துரையாடலுக்கு பின்னா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிடுகையில்
அனேகமான அரச நிறுவனங்களில் சிறந்த அதிகாரிகள் பலர் உள்ளனர். இவர்களில் ஒரு சில மோசமான அதிகாரிகளும் காணப்படுகின்றனர்.
இந்த மோசமான அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக குறித்த நிறுவனத்தில் அர்ப்பணிப்புடன் இதயசுத்தியுடன் சேவையாற்றும் அனைத்து அதிகாரிகளின் நற்பெயர்களுக்கும் களங்கம் ஏற்படுகின்றன.
நாட்டில் இடம்பெறும் திட்டமிட்ட குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கப்பம் பெறல் போன்ற செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும்.
அதேபோன்று அரசு நிறுவனங்களில் இருந்து கொண்டே இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இருப்பார்களேயானால் அதில் பாரிய பிரச்சினை இருக்கின்றன.
எனவே மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடும் அல்லது அதிகார துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளும் இறுதி நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நாளில்தான் இது நிறைவு பெற்றது என்று கூறமுடியும் என்றார்.
எமது நாட்டு மக்கள் பொலிசாரிடம் இருந்து அதிகமான விடயங்களை எதிர்பார்க்கின்றனர்.சுபீட்சமான எதிர்காலம் என்பது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் இதற்கு தேசிய பாதுகாப்பு பிரதானமான ஒன்றாகும்.
நாட்டு மக்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழும் சூழலை ஏற்படுத்துவது தேசிய பாதுகாப்பை சார்ந்தது. என தெரிவித்துள்ளார்