கடந்த திங்கட்கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கு கெரவலபிட்டிய துணை மின்நிலையத்தில் அதிகாரி ஒருவர் செய்த தவறுதான் காரணம் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த பிழையே துணை மின்நிலையத்தின் தவறான செயல்பாட்டிற்கு வழிவகுத்தது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கை ஆகஸ்ட் 24 அன்று ஒப்படைக்கப்படும் என்று அவர் அமைச்சரவையில் தெரிவித்தார்.
முந்தைய நான்கு சந்தர்ப்பங்களில் இதேபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் இதேபோன்ற மின் தடைகளைத் தடுக்க, குழுவால் சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகள் குறித்து நாட்டிற்கு விளக்கமளிப்பேன் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையே, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் 24ம் திகதிக்குள் ஆலையை மீள இயக்க முடியுமென இலங்கை மின்சார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் டலஸ் அலகபெரும மேலும் தெரிவித்துள்ளார்.