உயர்தர பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்புக்கு உலகப்புகழ்பெற்றது அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனம்.இந்த நிறுவன பைக்குகளை சொந்தமாக்குவது என்பது சிலரின் வாழ்க்கையின் லட்சியமாக கூட இருக்கலாம். ஆட்டோமொபைல் பிரியர்களின் கனவு வாகனமான ஹார்லி டேவிட்சன் கருதப்படும் நிலையில் அந்நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது ஹார்லி ரசிகர்களை கவலைகொள்ளச் செய்வதாக அமைந்துள்ளது.
ஹரியானாவின் பவல் எனுமிடத்தில் இந்நிறுவனம் ஒரு அசெம்பிள் தளத்தை லீசுக்கு எடுத்து வைத்துள்ளது. இங்கு தான் உதிரி பாகங்கள் அசெம்பிள் செய்யப்பட்டு இந்நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் இந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை குறைந்து இருப்பதாகவும், எதிர்காலத்தை கணக்கிட்டு இந்தியாவிலிருந்து இந்நிறுவனம் வெளியேற திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய பசிபிக் பிராந்தியம் என அந்நிறுவனத்தின் விற்பனை வலுவாக இருக்கும் 50 சந்தைகளில் மட்டும் ஹார்லி டேவிட்சன் கவனம் செலுத்த இருப்பதாகவும், விற்பனை குறைவான, லாபம் குறைவான சந்தைகளிலிருந்து அந்நிறுவனம் வெளியேறலாம் எனவும் கருத்து வெளியானது. இருப்பினும் இது தொடர்பாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் இன்னமும் வெளியிடவில்லை.
கடந்த நிதியாண்டில் ஏறக்குறைய 2,500 என்ற எண்ணிக்கையில் ஹார்சி டேவிட்சன் பைக்குகள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளது.
ஹார்லி டேவிட்சன் இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியாவிலிருந்து வெளியேறும் 2வது ஆட்டோமொபைல் நிறுவனமாக அது இருக்கும். முன்னதாக 2017ல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.




















