ஸ்ரீலங்காவில் மாகாணசபை முறையையும் விருப்புத்தெரிவு வாக்குமுறை தேர்தலையும் ரத்துச்செய்யவேண்டும் என்று தேசியக் கூட்டுக்குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் ஊடாக கொண்டு வரப்பட்ட அவசியமற்ற திருத்தங்கள் என்பவற்றை அகற்றும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக தெரிவித்துள்ள தேசியக்கூட்டுக்குழு மாகாணசபைகள் முறை ரத்துச்செய்ய முடியாது என்று நீதியமைச்சர் அலி சாப்ரி தெரிவித்துள்ளமையை கண்டித்துள்ளது.
மாகாணசபைகள் இன்றி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. மாகாணசபை என்பது வெள்ளை யானை போன்றது அதனால் நாட்டுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை.
மாகாணங்களை ஒன்றிணைப்பதன் மூலம் இனக்குழுக்கள் உருவாவதற்கு வழியேற்படும் என்று தேசியக்கூட்டுக்குழுவின் இணைத்தலைவர்களான இளைப்பாறிய லெப்டினன்ட் கேர்னல் அனில் அமரசேகர மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி கேஎம்பி கொட்டகதெனிய ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால் மாகாணசபை முறையை ரத்துச்செய்யமுடியும் என்று இருவரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை விகிதாரசபை முறை தேர்தலை ரத்துச்செய்து விட்டு 1978ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்பிருந்த தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துமாறும் குழு கோரியுள்ளது.