கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் நல்லிணக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டை பிளவுப்படுத்த எவருக்கும் வாய்ப்பு கிடைக்காது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் புலிகளின் கனவுகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்த வகையிலும் நிறைவேறாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மினுவங்கொடையில் இன்று தொகுதி அமைப்பு பிரதிநிதிகளை தெளிவுப்படுத்துவதற்காக நடந்த கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் ஆற்றிய உரை சம்பந்தமாக நாட்டுக்குள் தற்போது விவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விக்னேஸ்வரனின் உரையை சபை குறிப்பேட்டில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
விக்னேஸ்வரன் நாட்டுக்கு கெடுதியான கருத்தை வெளியிட்டிருந்தால், அதனை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அது குறித்து விவாதங்கள் தேவையில்லை.
எனினும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் பிரிவினைவாதத்தை ஊட்டி வளர்த்த அரசாங்கம். அந்த அரசாங்கத்தில் வாய்களை மூடிக்கொண்டிருந்தவர்கள் தற்போது விக்னேஸ்வரனின் உரை ஊடாக சாதகத்தை பெற முயற்சித்து வருகின்றனர்.
விக்னேஸ்வரனின் கருத்துக்கு மட்டுமல்ல நாட்டை பிளவுப்படுத்தும் அவர்களின் நிலைப்பாடுகளுக்கும் நாங்கள் எந்த தளர்வையும் காட்டப் போவதில்லை.
தற்போது ஆட்சியில் இருப்பது பிரிவினைவாதத்திற்கு துணை போன அரசாங்கம் அல்ல. இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கோட்டாய – மகிந்த அரசாங்கம் என்பது 30 ஆண்டு பேரை முடிவுக்கு கொண்டு வந்த நல்லிணக்கத்தின் இணைப்பு.
நாட்டின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டே தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினர்.
இதனால் விக்னேஸ்வரன் போன்றவர்கள் எப்படி துள்ளினாலும் நாட்டை பிரிவிக்கும் கனவை அவர்களால் நிறைவேற்ற எந்த இடமும் கிடைக்காது எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.