சிங்கபூரில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை மாணவர் ஒருவர் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமைக்காக கடுமையான தண்டனையைத் தவிர்ப்பதற்காக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில், அந்நாட்டு அதிகாரிகள் நேற்று இதனை தெரிவித்துள்ளனர்.
21 வயதான மணில்கா பொன்சேகா என்ற இலங்கை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 12ம் திகதி உயிரிழந்த நிலையில், 16ம் திகதி சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கபூரில் உள்ள இலங்கை அதிகாரிகள் மரணத்தை உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், உயிரிழப்பிற்கான உண்மையான காரணத்தை அறிய சிங்கப்பூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினரின் தகவல்படி, குறித்த மாணவர் தண்ணீர் போத்தல் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக தனிமைப்படுத்த விதிகளை மீறி அருகில் உள்ள கட்டிடம் ஒன்றுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது அங்கிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து விசாரணை செய்த அந்நாட்டு அதிகாரிகள் குறித்த மாணவருக்கு 5000 அமெரிக்க டொலர் அபராதம் அல்லது ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தனர்.
அபராத தொகையை செலுத்த முடியாமையினால், சிறைக்கு செல்வதற்கு அஞ்சி குறித்த மாணவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகளால் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை, விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















