கலகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி – குருணாகலை வீதியின் மடவல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள் பலியாகியுள்ளனர். நேற்று (23) இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருணாகலை நோக்கி பயணித்த கொள்கலன் லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த கார் ஒன்றில் மோதி, மற்றுமொரு கார் மீதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு வாகனங்களில் வந்தவர்களும், கொள்கலன் சாரதியுமாக படுகாயமடைந்த 6 பேர் கலகெதர மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, கொள்கலன் லொறி கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளான காரின் சாரதி மற்றும் பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை மற்றும் 36 வயதுடைய அவரின் தந்தை ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் கலகெதர மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.