ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியா அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கரு ஜெயசூரியா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். தலைமைத்துவத்தை ஏற்க தயாராக இருக்கும் தனது நிலைப்பாட்டை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களிற்கு ஏற்கனவே அறிவித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 14 ம் திகதி, ரணில் விக்கிரமசிங்கவிற்கும், கட்சியின் செயற்குழுவிற்குமிடையில் நடந்த கலந்துரையாடலில், கட்சிக்கு புதிய மற்றும் இளம் தலைவரை தெரிந்தெடுப்பதென உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.
முன்னாள் எம்.பி.க்கள் ரவி கருணநாயக்க, தயா கமகே, அகில விராஜ் கரியவாசம், வஜிர அபேகுணவர்தன, அர்ஜுன ரணதுங்க, நவீன் திசானாயக மற்றும் ருவன் விஜேவர்தன ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக இளம் தலைவர்களாக பரிந்துரைக்கப்பட்டனர்.
அடுத்த 06 மாதங்களுக்கு ரணில் விக்ரமசிங்க தலைவராக நீடிப்பார் என்றும், வரவிருக்கும் மாகாண சபை தேர்தல்களுக்குப் பிறகுதான் தனது பதவியில் இருந்து விலகுவார் என்றும் பின்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கரு ஜெயசூரியாவின் அறிக்கை வெளியாகியுள்ளது.