லண்டனில் சிகிச்சை பெற்று வரும் ஆசிய நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்த பிரித்தானிய அரசிடம் முறைப்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்கில், அவருக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார்.
நவாஸின் சொத்து மதிப்பு பாகிஸ்தான் பண மதிப்பில் 1.6 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 22-ந் திகதி நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு என கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
அதனைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப் லண்டனில் சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தான் கோர்ட்டு அவருக்கு 8 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நவம்பரில் நவாஸ் ஷெரீப் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.
அதன் பிறகு டிசம்பர் 23-ந் திகதி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நவாஸ் ஷெரீப்புக்கு மேலும் 4 வாரம் ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. அதே சமயம் இனியும் மேற்கொண்டு ஜாமீனை நீட்டிக்க வேண்டுமானால் நவாஸ் ஷெரீப்பின் மருத்துவ அறிக்கைகளை பஞ்சாப் மாகாண அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமென லாகூர் ஐகோர்ட்டு தெரிவித்தது.
ஆனால் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யாத நவாஸ் ஷெரீப் தரப்பு, அவரது உடல்நிலை குறித்த மருத்துவ சான்றிதழை மட்டும் தாக்கல் செய்தது. இதை ஏற்றுக்கொள்ள, மருத்துவ வாரியம் மறுத்தது. இதனிடையே நவாஸ் ஷெரீப் லண்டன் வீதிகளில் சகஜமாக உலாவரும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு நவாஸ் ஷெரீப்பை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது. இந்த நிலையில் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்த பிரித்தானிய அரசிடம் முறைப்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த தகவலை பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான பிரதமரின் சிறப்பு ஆலோசகர் ஷாஜாத் அக்பர் கூறினார். லாகூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது இது பற்றி அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் அரசு அவரை (நவாஸ் ஷெரீப்) ஒரு தலைமறைவு குற்றவாளியாக கருதுகிறது. எனவே அவரை ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசுக்கு முறைப்படி கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான இந்த நடவடிக்கையை தனிப்பட்ட தாக்குதலாக பார்க்கக்கூடாது. நவாஸ் ஷெரீப் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் லண்டன் வீதிகளில் உலா வருவது பாகிஸ்தான் நீதித்துறையின் முகத்தில் விழுந்த ஒரு அறை. அரசாங்கத்தால் இதை அனுமதிக்க முடியாது.
இதில் தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை. நாங்கள் சட்டத்தை செயல்படுத்த மற்றும் அதன் தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே முயற்சிக்கிறோம். நவாஸ் ஷெரீப் நாடு கடத்தப்படுவதை விரைவுபடுத்த தேசிய பொறுப்புடமை முகமையை பாகிஸ்தான் அரசு அணுகும் என கூறியுள்ளார்.