தென்னாப்பிரிக்காவில் தேனிலவு சென்ற புதுமணப்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலைகாரன் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பம் முக்கிய முடிவெடுத்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் வைத்து பிரித்தானிய கோடீஸ்வரரான ஸ்ரியன் தேவானியின் மனைவி படுகொலை செய்யப்பட்டார்.
ஸ்ரியன் மற்றும் அன்னி தேவானி தம்பதி தேனிலவு கொண்டாட சென்ற நிலையிலேயே அன்னி தேவானி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் வாடகை டாக்ஸி சாரதியான சோலா டோங்கோ என்பவர் கைது செய்யப்பட்டதுடன், குறித்த கொலைக்கு திட்டமிட்டது அன்னி தேவானியின் கணவரே என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் டோங்கோ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், டோங்கோவின் நல்ல நடத்தையை காரணம் காட்டி அவர் கடந்த மாதம் பரோலில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது டோங்கோவின் பரோல் ரத்து செய்யப்பட்டதாக தென்னாப்பிரிக்காவில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அன்னி தேவானியின் தந்தை வினோத் ஹிந்தோச்சா மற்றும் தாய்மாமா அசோக் ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, டோங்கோவின் விடுதலையை ரத்து செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் பல முதியோர் இல்லங்களை நடத்திவரும் பிரிஸ்டல் பகுதியை சேர்ந்த தற்போது 40 வயதான ஸ்ரியன் தேவானி திட்டமிட்டே தமது மனைவியை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி வாடகை கொலைகாரர்களை ஏற்பாடு செய்த ஸ்ரியன், சம்பவத்திற்கு பிறகு பணத்தை செலுத்தி கொலைகாரன் டோங்கோவை தப்பிக்க வைத்ததும் ஸ்ரியன் என்றே கூறப்படுகிறது.
ஆனால் ஸ்ரியன் மீது இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் கண்டறிந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு அவர் மீதான விசாரணையை முடித்துக் கொண்டதுடன் அவர் குற்றமற்றவர் எனவும் தீர்ப்பானது.
அன்னி தேவானி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் டோங்கோவுக்கு பல தகவல்கள் தெரியும்,
நான்கு மணி நேரம் அவரிடம் விசாரித்தும் தங்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்கிறார் அசோக்.
இருப்பினும், டோங்கோ விடுவிக்கப்படவில்லை என்பதில் தங்களுக்கு மகிழ்ச்சியே என அவர்கள் தெரிவித்துள்ளனர்.



















