நாடாளுமன்றத்திற்கு செல்வதை விட தற்போது செயற்படும் விதத்தில் வெளியில் இருந்து வேலை செய்வதை தான் அதிகம் விரும்புவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வந்து அங்குள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என அந்த கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி பகிரங்க அழைப்பை விடுத்தனர்.
இது குறித்து கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள பசில் ராஜபக்ச,
நாடாளுமன்றத்தில் இருப்பதை விட வெளியில் இருப்பது சிறந்தது என நான் நினைக்கின்றேன். தேவை ஏற்பட்டால், நாட்டு மக்கள் கூறினால், நாடாளுமன்றத்திற்கு வருவேன்.
எனினும் நாடாளுமன்றத்திற்கு செல்வதை விட வெளியில் இருக்கவே அதிகம் விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அரசியலமைப்புத் திருத்தம் சம்பந்தமாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பசில், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கினர். அதற்காகவே நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கோரினோம்.
அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ளாமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் பலனில்லை. எமக்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் போதுமானது.
எனினும் மக்கள் 150 நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கியுள்ளனர். அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ள அல்லது புதிய அரசியலமைப்புச் சட்டத் கொண்டு வரவே மக்கள் இந்த பலத்தை வழங்கினர்.
இதற்காக துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.