சமீபத்தில் உயிரிழந்த வசந்தகுமார் எம்.பி. புகைப்படத் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து குஷ்பு அதிருப்தி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார் கடந்த 28ஆம் திகதி காலமானார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் முக்கியமான நபர் என்பதால், அவருடைய புகைப்படம் திறக்கும் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன. இந்தப் புகைப்படங்களைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, உயர்வான செயல். ஆனால், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவில் யாருக்குமே இது பற்றிய தகவல் சொல்லப்படவில்லை.
தமிழகத்தில் இருக்கும் ஒரே தேசிய செய்தித் தொடர்பாளர் நான்தான். ஆனால் நான் இந்தத் தகவலைச் செய்தித்தாள்கள் மூலமாகத் தெரிந்து கொள்கிறேன். நாம் நம் வலிமையை அதிகரிக்க வேண்டும். நமது பாதுகாப்பற்ற மனநிலை, அகந்தை (ஈகோ) காரணமாக பலவீனமாக்கக் கூடாது. எப்போது அதைச் செய்வோம் என கேள்வியெழுப்பியுள்ளார்.
ஏற்கனவே குஷ்பு பா.ஜ.கவில் இணைய போகிறார் என தகவல் வெளியாகி வரும் நிலையில் ஆரின் இந்த கருத்து சர்ச்சனையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.




















