ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்பிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவளிக்குமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 69ஆவது நிறைவாண்டை முன்னிட்டு கொழும்பு பெல்லன்வில ரஜமகா விகாரையில் நாளைய தினம் விசேட நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
இதுகுறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
கோட்டாபய தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்பிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவினை அளிக்கவுள்ளது.
தனிநபருக்காக 19ஆவது திருத்தத்தை நீக்க நாங்கள் ஆதரவளிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே இந்த திருத்தத்தினை இரத்து செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் தான் சுதந்திரக் கட்சி இருக்கின்றது.
இதுவரை எப்படியான திருத்தம் செய்யப்போகின்றது என்ற விடயம் தெரியவில்லை. அதற்கான திருத்த வரைபு சமர்பிக்கப்பட்டதன் பின்னர் கட்சி என்ற வகையில் கூடி ஆராய்வோம்.
நாங்கள் இந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது கட்சி என்கிற வகையில் பதவிகளை கேட்கவில்லை.
கட்சித் தலைவரான முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சுப் பதவிக்குப் பதிலாக வேறொரு பதவியை வழங்குவதாக அரச தரப்பு எம்முடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கூறியிருந்தது. இது எங்களால் பேசப்பட்ட விடயமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.