அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் தடங்கலாக உள்ள சில விடயங்களை எமது அனுமதியுடன் திருத்தம் செய்து 20ஆவது திருத்தத்தை அரசு நிறைவேற்ற அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அதைவிடுத்து எமது அனுமதியின்றி 19ஆவது திருத்தத்தில் எதிர்மறையான திருத்தங்களை அரசு செய்யவோ அல்லது அதை முற்றாக இல்லாதொழிக்கவோ நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
19ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக் காலமும், நாடாளுமன்றத்தின் பதவிக் காலமும் 5 வருடங்களாக இருக்கவேண்டும். அதேவேளை, ஒருவர் ஜனாதிபதியாக இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்க முடியும். இந்த வரையறைகளில் மாற்றம் வரக்கூடாது.
அதேவேளை, அரசமைப்பு பேரவை, சுயாதீனக்குழுக்கள் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை ஆகியவற்றுக்குக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களிலும் மாற்றம் கொண்டுவர முடியாது.
இரட்டைப் பிரஜாவுரிமையுடைய ஒருவர் இந்த நாட்டில் நடைபெறும் எந்தத் தேர்தல்களிலும் போட்டியிட முடியாது என்ற விதிமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
அதாவது ராஜபக்சக்களின் சுகபோக அரசியலை மையப்படுத்தி 19ஆவது திருத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவோ அல்லது அதை இல்லாதொழிக்கவோ நாம் இடமளிக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.