மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் அடிப்படை பிரச்சினைகளை புதிய அரசாங்கமாவது நிறைவேற்றித் தரவேண்டும் என மன்னார் நேசக்கரம் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மன்னார் நேசக்கரம் பிரஜைகள் குழுவின் மாதந்த ஒன்றுகூடல் இன்று மன்னார் நேசக்கரம் பிரஜைகள் குழு அலுவலகத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட உப்புக்குளம் , பள்ளிமுனை , சாந்திபுரம் , ஜீவபுரம் , ஜிம்றோன் நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது தமது கிராம ரீதியாக உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தமது கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
குறிப்பாக தமது கிராமங்களில் ஒழுங்கான போக்குவரத்து வசதிகள் இல்லாமை, வீதிகள், கால்வாய்கள் ,தெருவிளக்குகள் என்பன ஒழுங்கான முறையில் செய்து தரப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் மழைக் காலங்களின் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் வீட்டு திட்டங்கள் மற்றும் வேலை வாய்புக்களில் தாங்கள் புறக்கணிக்கபடுவதாகவும் தெரிவித்ததோடு, புதிய அரசாங்கமாவது கிராம மட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி தீர்வை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் நேசக்கரம் பிரஜைகள் குழு ஊடாக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர், மன்னார் நக ரசபை தவிசாளர், ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்கக்கது.



















