கோட்டா-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
கட்சித் தலைவரான முன்னாள் அரச தலைவர் மைத்திரிக்கு எந்தவித பதவியையும் அரச தரப்பிலிருந்து தாம் கோரவில்லை என்று தெரிவித்த சுதந்திரக் கட்சி, அரச தரப்பே பதவியொன்றை வழங்குவதாக உறுதியளித்திருந்தது என்றும் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பெல்லன்வில ரஜமகா விகாரையில் நாளைய தினம் விசேட நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
இது குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில்,
19ஆவது திருத்தத்திற்கான வாக்கெடுப்பில் நான் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை. எவ்வாறாயினும் கடந்த 05 வருட காலத்தில் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளால் சட்டரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டன. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு இடையே அதிகார மோதல் இடம்பெற்றது.
நாட்டிற்குள்ளும் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. சபாநாயகர் இராணுவத் தளபதி, புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ்மா அதிபரை அழைத்து விசாரணை செய்யப்பட்டிருக்கவில்லை. ஆனால் கடந்த ஆட்சியில் அதுவும் இடம்பெற்றது. மூன்று அதிகார நிலைகள் ஏற்பட்டன.
ஆகவே தனிநபருக்காக 19ஆவது திருத்தத்தை நீக்க நாங்கள் ஆதரவளிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே இந்த திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் சுதந்திரக் கட்சி இருக்கின்றது. எனவே புதிய அரசியலமைப்புக்கு நாங்கள் எமது ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்குவோம்.
இந்த நிலையில் இதுவரை எப்படியான திருத்தம் செய்யப்போகின்றது என்ற விடயம் தெரியவில்லை. அதற்கான திருத்த வரைபு சமர்பிக்கப்பட்டதன் பின்னர் கட்சி என்ற வகையில் கூடி ஆராய்வோம். நாங்கள் இந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது கட்சி என்கிற வகையில் பதவிகளைக் கூட கேட்கவில்லை.
கட்சித் தலைவரான முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சுப் பதவிக்குப் பதிலாக வேறொரு பதவியை வழங்குவதாக அரச தரப்பு எம்முடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கூறியிருந்தது. இது எங்களால் பேசப்பட்ட விடயமல்ல. கட்சித் தலைவரும் பதவியை கோரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.