அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும்போது அதை ஆதரிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு குழுக்களில் உள்ள ஒன்பது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவளிப்பதாக அரசாங்கத்தின் முன்னணி அரசியல்வாதி ஒருவருக்கு உறுதியளித்துள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசியலமைப்பின் 20வது திருத்தம் அண்மையில் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, அதற்கு அங்கிகாரம் வழங்கப்பட்ட நிலையில், வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டப்பட்டது.
20வது திருத்தம் அரசியலமைப்புச் சபையை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக நாடாளுமன்றக் குழுவைக் கொண்டு வந்துள்ளதுடன், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையின் உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்கள் மீட்கப்பட்டு, சுயாதீன ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை 11 இல் இருந்து 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட இரண்டு முறை வரையிலான 19 வது திருத்தத்தின் முக்கிய அம்சங்கள் தக்கவைக்கப்பட்டுள்ளன.



















