மாத்தறையில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பொலஸார் தெரிவித்துள்ளனர்.
மொரவக்க, எட்டகால பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாக 119 என்ற பொலிஸாின் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மொரவக பொலிஸ் அதிகாரிகள் இருவர் அந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அங்கிருந்த நபருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுகயீனமடைந்த நபரை மொரவக்க வைத்தியசாலையில் அனுமதித்தவுடன் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய நபரின் தந்தை எனவும் அவர் 55 வயதுடைய மொரவக்க, எட்டகால பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இந்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகின்றது.
அத்துடன் பொலிஸாரின் செயற்பாடு காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்ததாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த மக்கள் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பின்னர் மாத்தறை பிரிவுகள் இரண்டுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரதேச மக்களுக்கு விடயத்தை தெளிவுப்படுத்தி அவர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
எப்படியிருப்பினும் உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனையில் இதயம் தொடர்பான பிரச்சினை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த பிரதேசத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு மதுபானம் அருந்தியிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.



















