தேசியப் பட்டியலுக்கான பெயர்ப் பட்டியலைத் தயாரிக்கும்போது அம்பிகா சற்குணநாதனின் பெயரை சம்பந்தனே முன்மொழிந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பந்தனுடைய விருப்பைக் கேட்டு அடுத்தக் கட்ட நவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு மட்டும்தான் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தப் பணியை நான் முன்னெடுத்தேன்.
ஆனால் நியமனக்குழு கூட்டத்தின்போது ஏற்கனவே எமது கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாகப் புதிய இளம் சந்ததியினரை வேட்பாளர்களாகக் களமிறக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
ஆனால் யார் யாருக்கு ஆசனம் வழங்காது விடுவது என்பதில் குழப்பம் ஏற்படலாம் என்ற காரணத்திற்காக கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அனைவரையும் மீள போட்டியிட அனுமதிப்பதென்றும் மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன் நியமனக்குழுக் கூட்டத்தில் சரவணபவனும் அமர்ந்திருக்கின்ற சந்தர்ப்பத்திலேயே அவருக்கு ஆசனம் வழங்கக்கூடாது என்றும் நேரடியாகவே கூறியிருந்தேன். அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருந்தேன். இதனை விட நான் எந்தவிதமான ஆதிக்கத்தையும் தேசியப் பட்டியல் தெரிவில் செலுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.


















