நாட்டில் ஒருபோதும் இல்லாதவாறு முட்டையின் விலை அதிகரித்துள்ள நிலையில் முட்டைகளை இறக்குமதி செய்யும் அனுமதியை நமக்கு பெற்றுத் தருமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேவேளை அது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும்பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போதே பேக்கரி உரிமையாளர்கள் முட்டையின் விலை உயர்வு தொடர்பில் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்கள்.
வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு எந்தவித நியாயமான காரணங்களும் இல்லாமல் முட்டையின் மொத்த விலை 22 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. இதனால் பேக்கரி உற்பத்தியாளர்கள் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இதற்கான குறுகியகால தீர்வாக பேக்கரி உரிமையாளர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதற்குப் பதிலளித்த வர்த்தக அமைச்சர் அது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விடுத்த பணிப்புரைக்கு அமைவாக கோழி முட்டையின் விலையினை 2 ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




















