பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலமொன்று அசைந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரவெட்டி, இராஜகிராமத்தை சேர்ந்த ஒருவர் நேற்று மாலை உயிரிழந்தார். நாகராஜா நரேஸ் (27) என்பவரே உயிரிழந்தார்.
அவர் நெல்லியடி நகரில் மூட்டை தூக்கிக் கொண்டு வந்தபோது, மூட்டையுடன் விழுந்தார். இதனால் மயக்கமடைந்த நிலையில், அவசர நோயாளர் காவு வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர் என தெரிவித்தனர்.
இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடல் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. இதன்போது, அவரது உறவினர்கள் குழுமி, சடலத்தை பார்க்க அனுமதி கோரினர். இதையடுத்து உறவினர்கள் சடலத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டது.
சடலத்தில் மீது விழுந்து கதறி அழுத உறவினர்கள், திடீரென சடலத்தில் அசைவு தென்படுவதாக குறிப்பிட்டனர். அத்துடன் காவலாளியையும் தாக்க முயன்று, வைத்தியசாலை நிர்வாகம் பொறுப்பற்று நடப்பதாக குற்றம்சாட்டினர்.
பின்னர் பொலிசார் அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
உறவினர்கள் தவறான புரிதலின் அடிப்படையில் குழப்பத்தில் ஈடுபட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.