பாகிஸ்தானின் பளிங்கு குவாரி ஒன்று சரிந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 11 பேரைக் காணவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.
மேற்கு பாகிஸ்தானின் மொஹ்மண்டின் சியாரத் பகுதியில், ஆப்கானிஸ்தானின் எல்லையில் இந்த குவாரி அமைந்துள்ளது.
கல்லை உடைக்கப் பயன்படுத்தப்படும் கனமான வெடிபொருட்களைப் பயன்படுத்துவதால் அப்பகுதி நிலையற்றதாக இருந்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கி உயிருடன் இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பாகிஸ்தான் வீரர்கள் உட்பட மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை தொடர்ந்து தோண்டி வருகின்றனர்.
உயர்தர வெள்ளை பளிங்கிற்காக இந்த பகுதி பிரபலமாக அறியப்படுகிறது, இவை பாகிஸ்தானில் விற்கப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
திங்கள்கிழமை மாலை ஏற்பட்ட சரிவின் போது 40 முதல் 50 பேர் வரை அந்த இடத்தில் இருந்ததாக மொஹமண்ட் மாவட்ட காவல்துறைத் தலைவர் தாரிக் ஹபீப் தெரிவித்தார்.
வழக்கமாக இந்த பளிங்கு குவாரிகளில் ஏராளமான மக்கள் வேலை செய்கிறார்கள், ஆனால் அதிர்ஷ்டவசமாக விபத்தின் போது பெரும்பான்மையானவர்கள் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பினர் என்று அவர் கூறினார்.
ஒன்பது பேர் காயமடைந்தனர். சிலர் உயிரிழந்தவர்களின் உடல்களை சம்பவயிடத்திலிருந்து நேரடியாக தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றதால், இறந்தவர்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை என்று கலனாய் மாவட்ட தலைமையக மருத்துவமனையின் மருத்துவர் சமீன் ஷின்வாரி தெரிவித்தார்.