இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடவேண்டும் என கனடாவில் உள்ள தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இறைமையுள்ள நாடு அல்லது அதன் தலைவருக்கு எதிராக இன்னொரு நாட்டில் நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதைத் தடுக்கும் விடுபாட்டுரிமையை கனடாப் பிரதமர் நீக்க வேண்டும் எனவும் தமிழ் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவ்வாறான நடவடிக்கை இலங்கையில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தங்கள் குடும்பத்தவர்களுக்காக நீதியைக் கோருவதற்கு உதவும் என கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவைச் சேர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர் குமணண் குணரட்ணம் செய்தியாளர் மாநாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது மனிதர்கள் அனைவரினதும் ஆழ்ந்த கரிசனைக்குரிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறைமையுள்ள நாடு ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் விடுபாட்டுரிமையை கனடா உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும். வர்த்தக பரிமாற்றங்களுக்காக அதை அகற்ற முடியும் என்றால் ஏன் சர்வதேச குற்றங்களுக்காக அதை நீக்க முடியாது?
விடுபாட்டுரிமையை நீக்கும் சட்டமூலம் தமிழர்களுக்கு மாத்திரமல்ல சர்வதேச அளவில் காணாமல்போகச் செய்யப்பட்டமையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.