எதிர்தரப்பினரின் ஆதரவின்றி 20ஆவது திருத்தத்தை ஒன்றரை மாத காலத்துக்குள் நிறைவேற்றியே தீருவோம் என கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் மீண்டும் சூளுரைத்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, 20ஆவது திருத்தச் சட்டம் எதிர்வரும் ஒன்றரை மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
அரச தலைவர் மற்றும் பிரதமரின் அதிகாரங்களுக்கு எந்தவித வகையிலும் முரண்பாடுகளோ அல்லது பாதிப்போ ஏற்படாத வகையில் நிர்வாகத்தை கொண்டுசெல்வதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்படும்.
குறிப்பாக 19ஆவது திருத்தத்தில் இருந்த குறைபாடுகள் காரணமாக அந்த திருத்தச் சட்டத்தையே மக்கள் புறக்கணித்து அதனைக் கொண்டுவந்த அரசாங்கத்தையும் மக்கள் புறக்கணித்தார்கள்.
இன்று அந்த திருத்தச் சட்டத்தை இரத்து செய்யும் புதிய அரசியலமைப்புத் திருத்த்ததை அரசாங்கம் கொண்டுவருகிறது. இன்னும் ஒன்றரை மாதத்தில் பெரும்பான்மை பலத்துடன் இதனை நிறைவேற்றுவோம் என்று அவர் குறிப்பிட்டார்.




















