தியாகி திலீபனின் நினைவேந்தலை தடுத்து, தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை அரசு தடுத்தமைக்கு எதிராக ஜனநாயக வழி போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி சாண் ஏற முழம் சறுக்கும் நிலைமையில் உள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே முன்னின்று இந்த முயற்சியை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த முயற்சியில் இணைவது இலங்கை தமிழ் அரசு கட்சியை வலுப்படுத்தி விடலாமென கட்சிக் கணக்கு பார்ப்பதால் சறுக்கல் நிலைமைக்கு சென்றுள்ளது.
திலீபன் அஞ்சலி தடையை அரசு இறுக்கமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இது மாவீரர்தினத்தை தடைசெய்வதற்கான முன்னோடியாக கருதப்படுகிறது. இந்த நிலையில், தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு, அஞ்சலி உரிமையை வலியுறுத்தவும், மக்களின் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான அஞ்சலிக்கும் உரிமையில் அரசு கைவைக்க அனுமதிக்க கூடாது என்பதை மக்களை திரட்டி உறைக்கும் விதமாக வெளிப்படுத்த, மாவை சேனாதிராசாவே ஆரம்ப முயற்சியை மேற்கொண்டார்.
நேற்று முன்தினம் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த மற்றைய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. அதற்கு, சிவாஜிலிங்கம் கைதை பல கட்சிகள் காரணமாக தெரிவித்தன.
இந்த நிலையில், பொது அமைப்புக்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து, ஜனநாயக போராட்டம் ஒன்று தொடர்பில் கலந்துரையாடுவதென தீர்மானிக்கப்பட்டது. நாளை 18ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு கூட்டத்தை கூட்டுவதென தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கான அழைப்பு, தம்மை தமிழ் தேசிய கட்சிகளாக பிரகடனப்படுத்தியுள்ள ஒவ்வொரு கட்சிக்கும் விடுக்கப்பட்டது. கட்சிகளின் பிரமுகர்களிற்கு மாவை சேனாதிராசாவே தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி அழைப்பு விடுப்பதுடன், இன்று அனைத்து கட்சிகளின் தலைமைகளிற்கும் கடித மூலமும் அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைமைகளிற்கும் தொலைபேசி, எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த செய்தி எழுதப்படும்போது, நாளைய சந்திப்பில் கலந்து கொள்வதில்லையென்ற முடிவிலேயே இரண்டு கட்சிகளும் உள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். “மாகாணசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படியான முயற்சிக்கு மாவை சேனாதிராசாவிற்கு ஒத்துழைப்பது, தமிழ் அரசு கட்சியை வலுப்படுத்தி விடும் என கட்சியின் தலைமை கருதுகிறது“ என்றார்.
தொலைபேசி வழியாகவும், கடிதம் மூலமாகவும் தமக்கு அழைப்பு வந்ததையும் அந்த பிரமுகர் உறுதிசெய்தார்.
இதேவேளை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் நாளைய கலந்துரையாடலிற்கு செல்லாது. அந்த கூட்டணியின் ஒன்றுக்கு மூன்று கட்சிகளின் பிரமுகர்கள் இதை தமிழ்பக்கத்திடம் உறுதிசெய்தனர்.
விக்னேஸ்வரன் கொழும்பில் நிற்பதால் அவருடன் கலந்துரையாட அவகாசம் கிடைக்காததால் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர்கள் நாளைய சந்திப்பு தொடர்பில் ஆர்வமின்றி- விருப்பமின்றி இருப்பதை அவதானிக்க முடிந்தது.
இந்த முயற்சிக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவது மாவையை அரசியல்ரீதியாக பலப்படுத்தலாமென்ற அவச்சத்தை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தினார்.




















